தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீர் விசிட் கொடுத்த சசிகலா..! முழு விவரம் இதோ..
தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நேரடியாக சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் , தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் அவரது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் இவர்களது இந்த சந்திப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டு அதற்கான அறிக்கையும் சசிகலா சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் இந்த சந்திப்பானது போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த உடனான அந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.
அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளிட்ட சசிகலா, யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் இல்லம் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.
கோயில் தரிசனம், தொண்டர்களிடம் நேரிலும் தொலைபேசியிலும் பேசுதல், பொது நிகழ்ச்சிகள், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல், அறிக்கை வெளியிடுதல் என்று சசிகலா தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாய் வலம் வருகிறது .
