கோயிலுக்குள் செருப்பு அணிந்து சென்றேனா? மனசாட்சியுடன் பேசுங்கள்… எம்.எல்.ஏ. விஜயதரணி ஆவேசம்…
பகவதி அம்மன் கோயிலுக்கு, காலணியுடன் வந்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் குறித்து விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி விளக்கமளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி பார்வையிட்டனர். விஜயதரணி காலில் காலணி அணிந்தபடி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறைக்கு முன்புறம் நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இது குறித்து அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, தான் கோயில் வாசலுக்கு வெளியே தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். மனசாட்சியற்ற யாரோ, தன்னைப்பற்றி தவறாக பரப்பி வருவதாகவும், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். மேலும், எத்தனை நபராக இருந்தாலும் அவர்கள் மீது பல கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போடுவேன் என்றும் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்தார்.
