Uncategorized

எது நடந்துவிடக் கூடாது என மக்கள் பயந்தார்களோ அது நடந்து விட்டது… திமுகவை விமர்சித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட்

எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் பயந்தார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை சில திமுக ஆதரவாளர்கள் சூறையாடும் காட்சிகள் நேற்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் திமுக தலைவர் ஸ்டாலினின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்” என்ற கருத்துடன் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது, சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே, ஆனால் எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் பயந்தார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என ராமதாஸ் அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.