தாறுமாறாக ஏறும் பெட்ரோல் விலை.. ! திக்குமுக்காடும் பொதுமக்கள்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (ஏப் – 02) ஒரு லிட்டர் பெட்ரோல், 108.21, டீசல் ரூ.98.28க்கு விற்பனையாகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ., 3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.
அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், நவ., 4ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின.
பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், இம்மாதம் 22ல், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல் 107.45 ரூபாய்; டீசல் 97.52 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் இன்று(ஏப்.02), பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 0.76 பைசா உயர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.108.21, டீசல் ஒரு லிட்டர் ரூ.98.28 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
