விளையாட்டு

ஐ.பி.எல் 2022 : 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டி, மும்பையில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18 புள்ளி 5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ரன்னும், உமேஷ் யாதவ் 18 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு அணியும் தடுமாறியது.

கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து டேவிட் வில்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 27 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.