தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் !
கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய நிர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இன்னும் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று நடந்த கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது.
அதாவது கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 14-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது, மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
