அரசியல்தமிழ்நாடு

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் மகளிருக்கு 50% இடம் ஒதுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கருப்பு கொடியேந்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, மத்திய அரசுக்கு எதிராக கோசமிட்டும், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தியும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Kanimozhi Karunanidhi

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் , டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராட்டமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது அவ்வப்பொழுது பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றப்பட்டதற்கு பாஜக வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது பாஜக அரசு தினமும் உயர்த்தி வருகிறது. இதனால் விலைவாசி அதிகரித்து வருகிறது.

கொரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். கொரோனா காலத்தில் நமக்கு உணவளித்த விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது, வேலையில்லா திண்டாட்டம், மாணவர்களை பழிவாங்கும் சூழல் என மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் எண்ணப்போக்கு போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு எதிரான அடுத்தக்கட்ட போராட்டம் திமுக தலைமையின் முடிவின் படி நடைபெறும் எனவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு என்று அவர் தெரிவித்தார்.