ஆப்கனில் இந்தியர்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆப்கனில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நிலவும் சூழ்நிலை மற்றும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் டில்லியில் நடந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளியுறவு செயலர், ஆப்கனுக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
ஆப்கன் நிலவரம் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் தெரிவித்துள்ளோம். மீட்பு பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ‛தேவி சக்தி’ என பெயரிடப்பட்ட இந்த மீட்பு பணிக்கு, 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான இந்தியர்களை அழைத்து வந்துவிட்டோம். ஆனால், முழுமையாக இல்லை. அனைவரையும் நிச்சயம் மீட்டு கொண்டு வருவோம். ஆப்கனைச் சேர்ந்த சிலரையும் அழைத்து வந்துள்ளோம். விரைவில் அனைவரையும் மீட்பதில் அரசு முழு உறுதிபூண்டுள்ளது. ஆப்கனில் உள்ள நமது மக்களை அழைத்து வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
