அரசியல்

“திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை”… எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு…

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனைக்கு, பழிவாங்கும் நோக்கோடு, திமுக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இது கண்டிக்கதக்கது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். சோதனையைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியிடம், லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக காவல் துறையினரை ஏவிவிட்டு அதிமகவை களங்கப்படுத்த முயற்சி செய்வதாகவும், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.