அரசியல்

பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சோதனை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் காட்டம்…

எதிர்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரைக் குறிவைத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் இருக்கும்போது காவல் துறையினரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்தும் முயற்சி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எதிர்கட்சிகளை பழிவாங்கம் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது. ஆளும் கட்சி என்ற மமதையில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் சோதனை செய்து வருவதாகவும், இதுபோன்ற எத்தனையோ அடக்குமுறைகளை சந்தித்துள்ளோம் என்றும் காவல் துறையை ஏவிவிட்டு கட்சியை அழித்தவிடலாம் என்ற அவர்களது எண்ணம் ஒருபோது ஈடேறவில்லை என்றார்.

நீதிமன்றம் இருக்கும்போது காவல் துறையினரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும், எங்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தவறு என்பதை நீதிமன்றத்தில் நிருபிப்போம் என்றார். மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ உள்ள நிலையில், அதில் கவனம் செலுத்தாமல், அதிமுகவை பழிவாங்க இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இது அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் ஜெயக்குமார் கூறினார்.