கர்ப்பிணியை அலைகழித்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் மீது புகார்…!
கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்குப் பதிலாக மாற்று ரத்தத்தை வழங்க வலியுறுத்தி அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்த சம்பவம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், புதுவயல் அருகே பெத்தாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வி. 3 மாத கர்ப்பிணியான இவர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு ரத்தம் குறைவாக இருந்த காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

பாண்டிசெல்விக்கு, ரத்தம் செலுத்தப்பட்டதற்கு பதிலாக மாற்று ரத்தம் வழங்க வேண்டும் என்று பாண்டி செல்வியின் குடும்பத்தாரிடம் செவிலியர் ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால், மாற்று ரத்தம் வழங்குவதற்கு, பாண்டி செல்வியின் குடும்பத்தாரால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 3 நாட்களாக பாண்டி செல்வியை டிஸ்சார்ஜ் செய்யாமல் மருத்துவமனையியே வைத்து அலைகழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்துகாரைக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறும்போது, அரசின் வழிமுறையை மீறி நோயாளியிடம் கடுமையாக நடந்து கொண்ட செவிலியர் மீது துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
