அரசியல்

தாத்தா நீங்க இல்லாத ஏக்கம் என்னை துரத்துகிறது… உதயநிதி உருக்கம்…!

இளைஞரணி செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் என பலரது பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துவதாக, எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 3-வது நினைவுநாள், திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் மறைவை அடுத்து திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்ட வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோனா காலகட்டத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த நிலையில் மறைந்த மு.கருணாநிதியின் 3-வது ஆண்டு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், முத்தமிழறிஞரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம். தன் போராட்ட பெருவாழ்வு மூலம், கோடானகோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, தன் அண்ணனின் பக்கத்தில் ஓய்வெடுக்கும் சமூகநீதி சூரியன் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தோம். வாழ்க கலைஞரின் புகழ். என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.