அரசியல்தமிழ்நாடு

“மக்களைத் தேடி மருத்துவம்” இந்தியாவிற்கே முன்னோடி திட்டம்… முதலமைச்சர் பெருமிதம்…

மக்களைத் தேடி மருத்துவம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கிருஷ்ணகிரியில், இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக அமைந்திருக்கும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் என்கிற மகத்தான திட்டம் இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்துள்ளோம். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ துறை அமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்களின் செயல்படுகள் மிகுந்த அர்ப்பணிப்போடு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா 2-வது அலை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பாக செயல்பட்டது. மருத்துவர், செவிலியர்களின் தன்னலமற்ற பணி இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அரசு சார்பில் துவங்கியிருக்கிறோம். மருத்துவர்களைத் மக்கள் தேடி வரக்கூடிய சூழலை மாற்றி, மக்களைத் தேடி மருத்துவர் செல்லும் காலத்தை உருவாக்கியிருக்கிறோம். நோயாளிகளின் வீட்டுக்கே சென்று சிகிச்சைகள் வழங்கப்போகிறோம். ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதர நோய்கள், குழந்தைகளின் பிறவி குறைபாடுகள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கிய பணியாக கொண்டுள்ளோம்.

இந்த பணியில் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக 1264 பெண் சுகாதார தன்னார்வளர்களும், 50 பிசியோதெரபி மருத்துவர்களும், 50 செவிலியர்களும் நோயாளிகள் இல்லம் சென்று சேவையில் ஈடுபட உள்ளனர். இந்த திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்பட உள்ளது. ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். நோயாளிகளுக்கு தேவையான கூடுதல் சிகிச்சைகள் மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 202 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டுக்குள் பயனடைவார்கள். 10 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது முக்கிய உறுதி மொழியாக இருக்கும். அதன்படி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம். அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, மக்கள் உணர்ந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.