ஆட்சியரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார்…
கோவை ஆட்சியரை மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மனு அளிப்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும், அரசு விழாக்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அமர்ந்த நிலையில், மனுவை வாங்கியபோ அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செல்வராஜ் உள்ளிட்டோர், எழுந்து நின்று மனுவை வாங்க மாட்டீர்களா என அதட்டும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று மனுவை வாங்கினார். மற்ற அதிமுகவினரும் ஆட்சியரை மிரட்டும் வகையில் குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்சியரை மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சூலூர் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் தளபதி புகார் அளித்துள்ளார். கொரோனா விதிகளை மீறி நிறைய பேர், ஆட்சியர் அலுவலகத்தில் கூறியதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
