சினிமா

இளையராஜாவை இழிவுபடுத்தியதாக புகார்… பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்…

இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதாக இயக்குநர் ரத்தினகுமார் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கதாசிரியராக, ரத்தினகுமார் இருந்து வந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவை வைத்து திருமகன் என்ற படத்தை இயக்கினார். தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது யூடியூப் சேனலுக்காக, ரத்தினகுமாரை பேட்டி எடுத்திருந்தார். அதில், ரத்தினகுமார், இளையராஜாவை அவரது சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசியதாகவும், சித்ரா லட்சுமணன் அனுமதித்திருப்பதாகவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய இளமுருகு, கடந்த பிப்ரவரி மாதம் இந்த பேட்டி வெளியானது என்றும் மார்ச் மாதம் அப்போதைய டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றார். எனவே தற்போதைய புதிய டிஜிபியிடம் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக கூறினார்.

டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், இளையராஜாவை இழிவாக பேசிய வீடியோவை, யூடியூபில் இருந்து நீக்கியுள்ளனர். ஆதாரங்களை வேண்டுமானால் மறைத்திருக்கலாம் என்றும், ஆனால் குற்றம் குற்றம்தான் என கூறினார். இயக்குநர் ரத்தினகுமார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளமுருகு முத்து கூறினார்.