மத்திய அரசிடம் பாராட்டு பெற்ற தமிழகம்..! தடுப்பூசியை வீணாக்காமல் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு!
”கடந்த மே 1 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை, தடுப்பூசி போட்டதில், மருந்தை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது”, என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாராளுமன்றத்தில் கூறியதாவது, “41 லட்சம் கூடுதல் டோஸ்கள், குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாடு 5.88 லட்சம் கூடுதல் டோஸ்களையும், மேற்கு வங்கம் 4.87 லட்சம் கூடுதல் டோஸ்களையும், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் செலுத்தியுள்ளன. பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்யுள்ளது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதியளவாகும்.
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான ரூ.35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடியும், செயல்பாட்டு செலவுக்கு ரூ.9725.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை 100.6 கோடி டோஸ்கள் வழங்குவதற்கு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. ஆடர் செய்யப்பட்ட 100.6 கோடி டோஸ்களில், 64.1 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட், 36.5 கோடி டோஸ்கள் கோவாக்சின் ஆகும். ஜூலை 20 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 42.52 கோடி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன”, என கூறியுள்ளது.
