அரசியல்தமிழ்நாடு

ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது: ஓ.பி.எஸ்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துவதாக கூறினார்.

ரெய்டு மூலம் அச்சுறுத்தினால், அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்றார். இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராக இருப்பதாக கூறினார்.

எந்தவொரு புதிய அரசும் இதுபோன்று நடவடிக்களை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலை உருவாக்கும். பொய் வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரெய்டு நடந்து வருவதாக கூறினார். எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.