தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை தகவல்…
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகதியில் 21 ஆம் தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, 23 ஆம் தேதி உருவாகக்கூடிய சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வங்கக்கடலில் உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், வடதமிழகம் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியயுள்ள நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மற்ற மேற்கு தொடரச்சி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகம் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 23 ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக 20 ஆம் தேதி கடலோர பகுதி, மன்னார் வளைகுடா பகதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சென்னை வானிலை அறிவுறுத்தியுள்ளது. 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல், இடைஇடையே 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
