இந்தியா

கேரளாவை அச்சுறுத்தும் ஸிகா… கர்ப்பிணியைத் தொடர்ந்து 14 பேருக்கு வைரஸ் பாதிப்பு…

கேரளாவில் 24 வயது கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், பாறசாலை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தபோது, அதில் 14 பேருக்கு ஸிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸிகா வைரஸ்-க்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்காத நிலையில், அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஸிகா வைரஸ் பரவியுள்ள நிலையில், தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையோடு செயல்படு வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக பொது சுகாதார துறை கட்டமைப்பு மிக நன்றாக உள்ளது என்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏடிஎஸ் கொசுக்கள் இல்லாமல் செய்து விட்டால் ஜிகா வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.