மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு, முதல்வர், எதிர்கட்சி தலைவர் வாழ்த்து…
கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக – அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தோல்வியடைந்தார். 20 வருடங்களுக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜகவினர் நுழைந்தனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. நேற்று மாலை, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார். எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.
மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல்.முருகனுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், எல்.முருகனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதேபோல், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் எல்.முருகன், மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைவதாக பதிவிட்டுள்ளார். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
