அரசியல்தமிழ்நாடு

அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்கிறது… ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கூட்டறிக்கை…

அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர உறுதுணையாக இருப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பாஜகவி.ன கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சி.வி.சண்முகம் பேச்சுக்கு அதிமுக தலைமை பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தார். இதில் எவ்வித மாற்று கருத்திற்கும் இடமில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்றும், தேர்தல் வெற்றி – தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல என்றும் மக்கள் நலனே நமது குறிக்கோள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர உறுதுணையாக இருப்போம் என ஓ.பி.எஸ். – ஈபி.எஸ். உறுதி அளித்துள்ளனர்.