Covid19தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திய கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை…மருத்துவமனை இயக்குநர் தகவல்…

கொரோனா தடுப்புசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்றும் தயக்கம் காட்டும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க மருத்துவர்கள் உள்ளதாக எழும்பூர் தாய் – சேய் நல மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இந்த நிலையில், சென்னை, எழும்புர் தாய் சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இயக்குநர் விஜயா, எழும்புர் தாய் சேய் நல மருத்துவமனையில் இதுவரை 300 பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் கட்ட அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆம் கட்ட அலையில் குழந்தைகளுக்கு தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள மருத்துவ வல்லுநர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்று மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியதாக கூறினார்.

தற்போது வரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், தயக்கம் காட்டும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க மருத்துவர்கள் உள்ளதாக இயக்குநர் விஜயா தெரிவித்தார்.