Uncategorized

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்… சைக்கிளில் சென்று பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு…

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பாகவே பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். 500 மீட்டர் இடைவெளியில் சைக்கிளில் சென்று, போராட்டம் நடைபெறும் மேடைக்கு வந்தார்.

கொரோனா பரவல் உள்ள நிலையில், சைக்கிளில் பயணம் போகக் கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் அதையும் மீறி, பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.