தமிழகத்தில் காகிதமில்லா இ-பட்ஜெட்? சபாநாயகர் அப்பாவு ஆலோசனை…
தமிழகத்தில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவை விதிகள் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், சட்டப்பேரவையில் காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்யலாமா? அதற்கு வேண்டிய சாத்தியக்கூறுகள் என்ன? சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவர் முன்பும் தொடுதிரை வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்க கணினி மற்றும் கீ போர்டு வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் இதை வரவேற்றுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
தொகுதிகளுக்குள் வரக்கூடிய கோரிக்கை மனுக்களை, மெயில் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகின்ற அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தேர்தல் திமுக அளித்துள்ள பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
