தீபாவளிக்கு 1500 கி. சுவீட் ஓசியில் எடுத்துச் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… ஆதாரத்துடன் குற்றம் சாட்டும் பால் வளத்துறை அமைச்சர்…
கடந்த ஆட்சியின்போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு, தீபாவளி நாட்களில் ஒன்றரை டன் இனிப்புகளை ஆவின் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு நடத்தினார். ஆவின் விற்பனை நிலையங்களான அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, மெய்யனூர் சாலை என பல்வேறு இடங்களில் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விற்பனையகங்களுக்கு வந்த பொதுமக்களிடம், குறைக்கப்பட்ட விற்பனையில் ஆவின் பால் விற்கப்படுகிறதா என்றும் அவர் கேட்டறிந்தார்.

ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் தயாரிக்கும் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் விற்பனையாளர்களிடம் அமைச்சர் கூறினார். பின்னர், சேலம் ஐந்து ரோடு பகதியில் உள்ள ஆவின் பாலகத்துக்கு சென்ற அமைச்சர், பால் பண் வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு மற்றும் கிடங்குகளில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறினார். இது தொடர்பான விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு, தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினார். ஒரு பொருள் எடுத்தாலும் அதற்குண்டான பணம் கொடுத்துவிட்டுதான் செல்கிறோம். ஆனால், ராஜேந்திர பாலாஜி ஒன்றரை டன் பொருளை இலவசமாக எடுத்துக் சென்றுள்ளார். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
