அரசியல்தமிழ்நாடு

“தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்”… நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி…

தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் எனநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி – கடலூர் வரையிலான ஆறு மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிய அணை கட்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் முக்கிய நதியான மார்கண்டேய நதி, கர்நாடக எல்லை பகுதியான முத்தியால் மடுகுமலைப்பகுதியில் உருவாகி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது. வேப்பனபள்ளி, பாலனப்பள்ளி, திப்பனப்பள்ளி கிராமங்களைச் சுற்றியுள்ள நிலங்கள் மார்கண்டேய நதிநீரால் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் கர்நாடக அரசு மார்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளது. மார்கண்டேய நதியில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நிலையில், பங்காரு பேட்டையில் 40 மீட்டர் உயரத்தில் 414 மீட்டர் நீளத்தில் கர்நாடக அரசு அணையை கட்டி முடித்துள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் நீராதாரம் பாதிக்கப்படும் என்றும் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு இனி தண்ணீர் கிடைக்காத நிலை எற்பட்டுள்ளது. கர்நாடக பாஜக அரசு 10 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவிற்கு அணையை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மார்கண்டேய நதியைச் சார்ந்துள்ள கிருஷ்ணகிரி மக்களின் நலனைக் காக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளார். அதில், தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்கண்டேய நதியின் குறுக்கே 0.5 டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கில் பிரச்சனைக்கு தீர்வுகான நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 29 ஆம் தேதி மத்திய ஜல்சக்திக்கு அனுப்பிய கடிதத்தில் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு அணை கட்டியுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்கண்டேய நதியால் பாசனம் பெறும் 870 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.