அதிமுக ஆட்சியில் மருத்துவர் – செவிலியர்களுக்கு அதிக செலவு… ஆர்.டி.ஐ. மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்…
கொரோனா வார்டுகளில் பணிபுரிந்த மருத்துவர்கள் – செவிலியர்கள் தனியார் விடுதிகளில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டதில் அதிமுக ஆட்சியில் 100 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போது கொரோனா சிறப்பு வார்டுகளில் பணிபுரிந்த மருத்துவர்கள் – செவிலியர்கள் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மருத்துவர்கள் – செவிலியர்கள் தங்க வைப்பதற்கும் உணவு வழங்கப்பட்டதற்கும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். நெல்லையில் 2020 ஏப்ரல் மாதம் முதல் செப்டம்வர் மாதம் வரை மருத்துவர்கள் – செவிலியர்களுக்கு தங்கம் விடுதி மற்றும் உணவுக்காக 6.56 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான விரிவான அறிக்கை கோரியிருந்த நிலையில, 5.50 கோடி ரூபாய்க்கு மட்டுமே கணக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1.06 கோடி செலவிடப்பட்டது குறித்த தகவல் இல்லை என்று கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டவத்தின்கீழ் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும். 2.55 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நெல்லையில் மட்டும் 8 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது, மருத்துவர்கள் – செவிலியர்கள் தங்குவதற்கும் 1,900 கோடி ரூபாய் வாடகையும், 3 வேளை உணவிற்கு 600 ரூபாய் என ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 2,500 செலவு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. தற்போது, அதே தரத்துடன் கூடிய தங்கும் விடுதி – உணவிற்கு சேர்த்து 1,450 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,050 ரூபாய் சேமிக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் யார் முறைகேடு செய்தார்களோ அவரிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட வேண்டும் என்றும், முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.
