திருமணத்துக்குமுன் பிறந்த குழந்தை விற்பனை…! தந்தை உட்பட 4 பேர் கைது…
திருமணத்திற்கு முன்பு பிறந்த குழந்தையை விற்பனை செய்துவிட்டு, திருமணம் செய்ய முயன்றவர் உட்பட 4 பேரை வந்தவாசி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பவானி – சரத்குமார். இவர்கள் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு முன்பாக பிறந்த குழந்தை என்பதால், குழந்தையை வேறு யாருக்காவது குழந்தையை கொடுத்துவிட்டு, நாம் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பவானியிடம், சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமாரின் பேச்சை நம்பிய பவானியும், அதற்கு சம்மதித்து குழந்தையைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு சரத்குமாருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்வதை பவானி அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசர் விசாரணையில், வந்தவாசி, பெரியகாலனியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த சிலரிடம் குழந்தையை விற்பனை செய்ததாகவும், இதற்காக 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையை மீட்ட போலீசார், தாய் பவானியிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
