அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் தலைவியே… சசிகலாவை வரவேற்கும் போஸ்டர்களால் பரபரப்பு…
அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற தியாக தலைவியே வாருங்கள் என சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் விலகி இருந்த சசிகலா, தற்போது, அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட உள்ளதாகவும், அதன் காரணமாகவே அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவினருடன் தொலைபேசியில் உரையாடும் சசிகலா, அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த ஆடியோக்கள் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா நம்மிடம் உரையாடுவாரோ என்ற அச்சம் அதிமுகவினரிடம் உள்ளதாகவும், இதனை தவிர்க்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. துரோகிகளை துவம்சம் செய்ய அம்மாவின் தூய உள்ளமே வருக என்று அவரது ஆதரவாளர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், அழிந்து வரும் அதிமுகவை கைப்பற்ற புரட்சி தலைவி அம்மாவின் வழியில் எங்கள் தியாக தலைவியே வாருங்கள்… அதிமுகவை கைப்பற்ற… அதிமுக உண்மை தொண்டர்கள் விருதுநகர்… என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.
