தமிழ்நாடு

போலீசாரை கட்டை, கற்களால் தாக்கிய போதை இளைஞர்கள்… 3 பேர் கைது…

காவல் நிலைய சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருடன் போதை இளைஞர்கள் கற்கள், கட்டையால் தாக்கிய வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு காவல் நிலைய சோதனை சாவடியில் போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, உசிலம்பட்டி அருகே நல்லதேவன்பட்டியைச் சேர்ந்த 6 போதை இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்து, அங்கிருந்த பேரிகார்டில் மோதி கீழே விழுந்தனர். அங்கிருந்த போலீசார், போதை இளைஞர்களை கீழே இருந்து தூக்கி விட்டுள்ளார்.

போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவ்வாறு பேசக் கூடாது என்று போலீசார் கூறினாலும், போதை இளைஞர்கள் தாறுமாறாக பேசியுள்ளனர். மேலும், அங்கிருந்த தென்னை மட்டை, கற்களைக் கொண்டு போலீசாரை அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலின்போது சிறப்பு சார்பு ஆய்வாளர் சீராளன் மற்றும் காவலர் மேகநாதன் காயமடைந்தனர்.

இதையடுத்து போதை இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற மூன்று பேர் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. காவல் துறையினர் மீது போதை இளைஞர்கள், தென்னைமட்டை கற்களைக் கொண்டு தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.