அரசியல்தமிழ்நாடு

“கொரோனா முடிவுக்கு வரட்டும்… கட்டாயம் வருவேன்… கட்சியைக் காப்பாற்றுவேன்”… சசிகலா பரபரப்பு பேச்சு…

அதிமுகவினருடன், சசிகலாவின் தொலைபேசி உரையாடல் ஆடியோ தினம் தோறும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடும் சசிகலா, தனது கருத்துக்களை ஆணித்தரமாக கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்ற அதிமுக தொண்டரிடம், சசிகலா தொலைபேசியில் உரையாடினார். “கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும்.. கட்டாயம் நான் வருவேன். கட்சி இப்போது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. விரைவில் வந்து கட்சியைக் காப்பாற்றுவேன். நாட்டிலோ மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது.”

“ஆனால் இன்ற நாம் எம்.பி.க்களை இழந்து நிற்கிறோம். இருக்கும் எம்.பி.க்களையும் தவறான முடிவுகளால் வேறு கட்சிக்கு தாரைவார்த்து வருகிறோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னோடு தலைமையில் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்…” என்று ஈரோடு அதிமுக தொண்டர் சிதம்பரத்திடம் உரையாடினார்.

இதேபோல் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த சுந்தரிடம பேசிய சசிகலா, சேலத்தில் கட்சிக்காரர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். “கவலைப்படாமல் இருங்கள். நான் எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன்” என்றார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் 15 பேர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.