அரசியல்தமிழ்நாடு

“திமுக அடங்கிய யானை அல்ல; கட்டுக்கடங்காத யானை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை என்றும் யாராலும் அடக்க முடியாத யானை என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தன்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டதாகவும், திமுக அரசு அவ்வாறு செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை. யாராலும் அடக்க முடியாத யானை என்றார். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள் என்றும் திமுக அடக்க முடியாத யானை என்றார்.

யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி மொழிப்பற்றி சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம் என்றார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஆளுநர் உரை ட்ரெய்லர்தான் என்றும் அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், கொள்கைகள், நோக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது என தெரிவித்தார். செய்யாறு, திண்டிவனத்தில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்றும் இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.