தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…
9 மாதங்களாக அதிமுக அரசு எந்தவித மின் பராமரிப்பு செய்யாததே மின் வெட்டுக்கு காரணம் என்றும், இன்னும் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார்.
திமுக ஆட்சி அமைத்தால் மின் வெட்டு தலை தூக்கும் என்று சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வந்தனர். அதிமுகவினர் கூறியதுபோலவே, திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து மின் வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ள இந்த சமயத்தில், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. இந்த சூழலில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின் தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் காரணமாக மின் தடை ஏற்படுவதாக கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சனம் தெரிவித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னயில் புதைவழி மின் இணைப்பு திட்டம் இருக்கையில், அணில்கள் பூமிக்கு அடியில் செல்கிறதா? என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 9 மாதங்களாக அதிமுக அரசு எவ்வித மின் பராமரிப்பும் செய்யாததே மின் வெட்டுக்கு காரணம் என்றும், தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
