“6 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை”… எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை…
இந்தியாவில் கொரோனா பரவலின் 3-வது அலை அடுத்த 6 வாரங்கள் முதல் 8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது என்றும் அடுத்த 6 வாரங்கள் முதல் 8 வாரங்களில் தாக்கக் கூடும் என்றார். கொரோனா இரண்டாவது கட்ட பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றுவது குறையத் தொடங்கியுள்ளது.

சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதில்லை; முகக்கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா முதல் அலையின்போது பரவல் வேகம் குறைவாக இருந்ததாகவும், இரண்டாவது அலையின்போது பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது. இப்போது மாறுபாடு அடைந்துள்ள டெல்டா வகை தொற்று மிக வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார். தடுப்பூசி போடாவிட்டால், அடுத்த சில மாதங்களில் மக்கள் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார்.
