“அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர்”… ஈ.பி.எஸ்., சி.வி.சண்முகம் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்…
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் செயல்படுவதாக சசிகலாவுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடி வருகிறார். அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசி வருவதால் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, வலிமையோடும், பொலிவோடும் பீடுநடை போடுகின்ற அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சி உறுப்பினராக இல்லாதவரும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்குக்கூட தகுதி இல்லாதவர் என்றும் அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
