“சசிகலாவால் அதிமுகவில் நுழையவே முடியாது… சேர்க்கவும் மாட்டார்கள்”… பொன்னையன் அதிரடி…
சசிகலாவை, அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கவே மாட்டார்கள் என்றும் அவரால் அதிமுகவில் நுழையவே முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்ப செயலாளருமான சி.பொன்னையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சசிகலா எத்தனை பேரிடம் தொலைபேசியில் பேசினாலும், அவரை அதிமுகவில் யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றார். சசிகலாவை கட்சியை விட்டு எப்போதோ நீக்கிவிட்டோம் என்றும், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் – மதுசூதனன் தலைமையிலான அதிமுகதான் உண்மையானது உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை, தலைமை கழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், சசிகலா இருந்தபோது பல்வேறு சூழ்ச்சிகளை செய்தவர் என்றும், சசிகலாவின் சுயரூபம் தெரிய ஆரம்பித்ததால், போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை விரட்டினார் என்றும் கூறினார். மன்னிப்பு கேட்ட பிறகுதான் சசிகலா மீண்டும் உள்ளே நுழைந்தார். கட்சியில் பலபேருக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சிகள் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். எனவே சசிகலாவை யாரும் ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கவே மாட்டார்கள் என்றும் சசிகலாவால் அதிமுகவில் நுழையவே முடியாது என்றும் பொன்னையன் கூறினார்.
