தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம் – துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே கொரோனா வைரஸின் 3வது அலையை தடுத்துவிட முடியும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாமை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி குறித்து தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளதாகவும், புதுச்சேரியில் ஒரு நாள் கூட தடுப்பூசி இல்லை என்ற நிலை வரவில்லை என தெரிவித்த அவர் நோயற்ற மாநிலமாக புதுச்சேரி மாறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றில் இருந்து மக்களை முற்றிலுமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருவதாகவும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் அளவிற்கு அரசு தயராக உள்ளது என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே 3 வது அலையை தடுத்துவிடலாம் எனவும் தெரிவித்தார்.
