பாலியல் குற்றச்சாட்டில் துளிகூட உண்மை இல்லை… சிவசங்கர் பாபாவுக்கு சப்போர்ட் செய்த நடிகர்…
சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் துளி கூட உண்மை கிடையாது என்று அவரது சீடரும், நடிகருமான சண்முகராஜன்
பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை, கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிவசங்கர்பாபா உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சிவசங்கர் பாபா, ஆன்மீக பயணமாக டேராடூன் சென்றுள்ளதாகவும் அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரை விசாரிக்க சிபிசிஐடி குழுவினர் டேராடூன் சென்றுள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகர் சண்முகராஜன், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டில் உண்மை கிடையாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் எனது குரு சிவசங்கர் பாபா என்றும் நான் அவரது சீடராக 4 ஆண்டுகாலம் இருப்பதாக கூறினார். சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டில் துளி கூட உண்மை கிடையாது என்றும் இது முற்றிலும் பொய் என்றார். முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவருக்கும் பள்ளி மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடுதான் இதுவென்றும் நடிகர் சண்முகராஜன் தெரிவித்தார்.
சிவசங்கர் பாபாவுக்கு பெண்கள் மீது எந்த நாட்டமும் கிடையாது என்றும், அவர் பல பெண்களை படிக்க வைத்து வருவதாகவும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அவரை காமக்கொடூரன் போல சித்தரிப்பது சீடர்களான எங்களுக்கு மனஉளைச்சலை அளித்துள்ளதாக தெரிவித்தார். இரண்டு தரப்பினரையும் காவல் துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு நல்லவர் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்றும் நடிகர் சண்முகராஜன் கூறினார்.
