அரசியல்தமிழ்நாடு

தேநீர் கடைகள் திறக்க அனுமதி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் நாளை முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பார்சல் சேவைக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 முறை ஊரடங்கு நீட்டிப்பு வழங்கப்பட்டபோது தேநீர் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேநீர் கடைகள் செயல்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அரசிடம் முன் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் பெறுவதற்கு வசதியாக, மக்கள் பாத்திரங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் தேநீர் பெறுவதை தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.