Covid19தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படும் சிறுவர்கள்…! மூன்றாவது அலையின் தொடக்கமா இது? அச்சத்தில் பெற்றோர்கள் !

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டிபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் இன்று வரை குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை படுதீவிரமாக பரவி சில நாடுகளில் குறைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவியது. அதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணம் என்று கூறப்பட்டது. நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்ட இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் உருமாறிய கொரோனா குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் வெளிப்பாடாகவே கொரோனாவின் பரவல் குறித்து முன்னதாக எச்சரிக்கைகளும் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவும் என்றும், அது குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரையில் மூன்றாவது அலைக்கு தயாராகும் பொருட்டு கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் கடந்த மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 0 முதல் 19 வயதிலான சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னையில் மூன்றாம் அலை தொடங்கியதா என்ற அச்சம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பாக பெற்றோர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் .