‘ஒன்றிய அரசு’ முழக்கத்திற்குப்பின் ‘திராவிட நாடு’ கோரிக்கை ஒளிந்துள்ளது… கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு…
திமுகவின் ஒன்றிய அரசு எனும் முழக்கத்திற்குப் பின்னால், திராவிட நாடு கோரிக்கை ஒளிந்து கிடப்பதாக புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா எனும் பாரத தேசத்தை ஒன்றிய அரசு என்று அழைத்து அகமகிழ்ச்சி கொள்கின்ற ஒரு கூட்டத்தின் கூச்சல் இன்னும் அடங்கியபாடில்லை. மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு வந்த நாள் முதலே துள்ளி குதிக்கிறார்கள். திடீரென்ற இதுபோன்ற சிந்தனைகள், அவர்களிடத்தில் இன்று முளைத்திடவில்லை என்றும், மாநில சுயாட்சி – ஒன்றிய அரசு பல்லவியைப் பாடி வருவதிலும், உரக்க பேசுவதிலும் வேறொரு உள்ளார்ந்த நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்திய தேசம் ஒன்றுபட்ட பேரரசு என்றும் அதை எவரும் துண்டாட முடியாது என்றும் கூறியுள்ளார். அப்படி துண்டாட நினைப்பவர்களே துண்டாடப்பட்டு இருக்கிறார்கள் என்பதே வரலாறு என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக கூறினார். திமுகவின் ஒன்றிய அரசு எனும் முழக்கத்தின் பின்னால், திராவிட நாடு கோரிக்கை ஒளிந்து கிடப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
