பராமரிக்கப்படாத ஏசியால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…! மருத்துவர்களின் எச்சரிக்கைதான் என்ன?
காற்று மாசு காரணமாக உலக அளவில் ஆண்டு ஒன்றுக்கு 38 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைவிட முறையாக பராமரிக்கப்படாத ஏசி இயந்திரங்களில் இருந்து வெளியாகும் தூய்மையற்ற காற்று, மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெளியில் உள்ள காற்றைவிட வீட்டில் சுவாசிக்கும் காற்றானது 5 மடங்கு மோசமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. தரமற்ற காற்றை சுவாசிப்பதால், தலைவலி, தலைச்சுற்றல், கண், மூக்கு, தொண்டை எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கு, வீட்டில் முறையாக சுத்தம் செய்யப்படாத ஏசி இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மேற்கண்ட பாதிப்புகள் மட்டுமல்லாது நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைவிட ஏசி இயந்திரத்தில் சேரும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும், முறையாக பராமரிக்கப்படாத இயந்திரங்களில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, சிகரெட் புகை, பிரிண்டர் இயந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவை கலப்பது அதிகரிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏசி இயந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக யூகோவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முறையாக பராமரிக்கப்படாத ஏசி இயந்திரங்களால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவ்வப்போது அவற்றை சுத்தம் செய்து, அறையில் உள்ள காற்று தூய்மையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
