தமிழ்நாடு

யானையில் மணமகன் சவாரி… விதிமுறைகள் மீறி தடபுடல் திருமணம்… போலீசார் வழக்கு பதிவு…

திருமணத்திற்கு யானையில் சவாரி சென்ற மணமகன் உட்பட குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமண விழாக்களில் 50 பேருக்குமேல் கூடக்கூடாது என அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளை மீறும் வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருமணவிழா ஒன்று நடந்துள்ளது. நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்த திபாஷ்கர் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இரு தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அமணப்பெண் வீட்டிற்கு மணமகன் யானையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

சமூக இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செண்டை மேளம் முழங்க, யானை மீது அமர்ந்து மாப்பிள்ளையும் ஊர்வலம் வந்துள்ளார். அதேபோல் மாலையில் நடந்த திருமண வரவேற்பிலும் அதிகளவில் வட்டம் கூடியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.