அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்… நடத்தினால் போராடுவோம்… அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், நீட் தேர்வை நடத்தினால், அதை எதிர்த்து போராடுவோம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நீட் போன்ற நுழைவு தேர்வு ஏற்புடையதாக இருக்காது என்றம், மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்துள்ளார். ஆனாலும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. ஒரு நாள் நடைபெறக்கூடிய தேர்வாக இருந்தாலும் அதன் மூலமும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.