தமிழ்நாடு

புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு (சிறைக் கைதி எண் 7640), மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.