சினிமாதமிழ்நாடு

அடுத்தடுத்து இறந்த மூன்று திரை பிரபலங்கள்… திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்றால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்களை அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக நான் இழந்து வருகிறோம், கடந்த மார்ச் 14ம் தேதி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப் 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப் 30 அன்று கொரோனா தொற்றோடு, மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் நேற்று 500 படங்களுக்கு மேல் நடித்தவரும், என்னடி முனியம்மா பாடல் புகழ் நாட்டுப்புற பாடகர் டி.கே.எஸ்.நடராஜன் சென்னையில் வயது மூப்பால் காலமானார். இப்படி அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து தமிழ் சினிமா உலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று திரை பிரபலங்கள் மறைந்தது திரையுலகினர் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ஆட்டோகிராப்’ பட ‘ஒவ்வொரு பூக்களுமே’ புகழ் பாடகரும், மாற்றுத்திறனாளியுமான கோமகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். அதேப்போன்று 1980ல் ஒரு தலை ராகம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரை சினிமாவுக்கு தந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிமும் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இப்படி திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.