தமிழ்நாடு

வீதிகள் வெறிச்சோடட்டும், வீட்டில் இருந்தே முடிவுகளை ஊடகம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் – மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!

தேர்தல் முடிவுகளை வீட்டில் இருந்தே ஊடங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள், வீதிகள் வெறிச்சோடட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணைக்கையின் முடிவுகள் நாளை மறுநாள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே அறிவிக்கப்படும்.

இந்த கொரோனா பரவல் காரணத்தினால் வெற்றி கொண்டாட்டங்களுக்கும், கூட்டமாக கூடவும் தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை வீட்டில் இருந்தே ஊடங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் திமுக கட்சி தொண்டர்களும், உடன் பிறப்புகளும் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதை பற்றி அறிக்கையில்; சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன். இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சூழலில் வீட்டில் இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் வீட்டிலேயே மகிழ்வதும் தான் பொருத்தமான போக்கு. கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.