தமிழ்நாட்டில் தனி நபரின் கடன் ரூ. 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது” – வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர்
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தமிழ்நாடு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த நிலையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய் பார்த்தால்தான் என்ன இருக்கிறது எனத் தெரியும். உள்ளே போய் பார்த்துவிட்டு, தற்போதைய அரசு என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்” என பேசியிருந்தார்.
வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சனும் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தபோதும், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோதும் அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன், “கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்கு உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளது. திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை கொரோனா பெருந்தொற்று ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
சொந்த வரி வசூல் இதுவரை இல்லாத வகையில் குறைந்துள்ளது. 78,324 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கிய உண்மையான அளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக இருக்கிறது. 2025 – 2026 நிதியாண்டில் தமிழ்நாட்டில் தனி நபர் மீது 1,28,934 கடன் இருக்கிறது. இது கடந்த 2020 – 2021 நிதியாண்டில் ரூ. 67,087 என இருந்தது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் குஜராத்தில் 17.6%, மகாராஷ்டிராவில் 19.7%, கர்நாடகாவில் 23.4%ஆக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் 28.3%ஆக இருந்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
