அரசியல்இந்தியா

மோடிக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா? கனிமொழி எம்.பி ஆவேசம்

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. இதற்கிடையே எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்தின் மீது 2வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, “உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? கண்ணகியின் கோபத்தால் பாண்டிய மன்னன் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா? பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது.

மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நிவாரண முகாமில் போதிய வசதிகளோ, உணவு, குடிநீரோ இல்லை. மணிப்பூரில் நிவாரண முகாம்கள் சுகாதாரமற்றதாக, வாழ தகுதியற்ற வகையில் உள்ளது. மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். மணிப்பூர் வன்முறையில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மகாபாரதத்தில் திரெளபதியின் ஆடை கழற்றப்பட்டது பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள். திரெளபதியை போலதான் மணிப்பூர் பெண்களும் தங்கள் ஆடைகள் கழற்றப்படும்போது ஏதேனும் ஒரு கடவுளை வேண்டியிருப்பார்கள். ஆனால் அவர்களை காப்பாற்ற கடவுளும் வரவில்லை, அரசும் வரவில்லை. மகாபாரதம் நன்கு படித்தவர்களுக்கு தெரியும், குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமல்ல அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையிலிருந்து வண்டஹ்தாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் உள்ளது. ஹத்ராஸ், கத்துவா, உன்னாவ், பில்கிஸ் பானு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகியவை நடந்தபோது அமைதியாக இருந்தவர்களை இந்தியாவின் தாய்மார்கள் தண்டிப்பார்கள்” என்றார்.