மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றன – நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பெண்களுக்கு நடந்த கொடூரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 7 நாட்களாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. இன்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது, எதிர்க்கட்சியினர் வெளியே சென்றுவிட்டனர்.
மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு வெறும் அரசியல் பிரச்னை மட்டுமே. அவர்கள் மணிப்பூர் விவகாரத்தை வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுகுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையாக மணிப்பூர் மீது அக்கறை கொண்டிருந்தால் அதை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
